×

முகப்பொலிவை கூட்டும் இயற்கை ஃபேஸ் பேக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொலிவிழந்த முகத்தை சரி செய்ய ஃபேஸ் பேக்குகள் பெரிதளவில் உதவுகிறது. எனவே, பெரும்பாலான பெண்கள், பலவிதமான ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேசமயம், ரசாயனம் கலந்த ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கையான பொருள்களால் சருமத்திற்கு பராமரிப்புகளை கொடுத்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாகவும், சருமம் எப்போதும் பொலிவுடனும் இருக்கும். அந்தவகையில் இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைப் பார்ப்போம்:

சந்தன ஃபேஸ் பேக்

தேவையானவை:
சந்தனப் பொடி – ஒரு கிண்ணம்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கெட்டிப்பால் – 1 டம்ளர்
கற்றாழை ஜெல் -சிறிதளவு
வேப்பிலை -இளம் இலைகளாக 10 இலைகள்
கடலை மாவு – 1 கிண்ணம்

செய்முறை: கடலை மாவு, வேப்பிலை விழுது, பால் மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். அதனுடன் மணமாக இருக்கும் சந்தனப் பொடியைக் கலந்து கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை ஜெல்லை சிறிதளவு எடுத்து சேர்த்து கலந்து, முகத்தில் பூசிக் கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து மிதமான வெந்நீரில் முகத்தைக் கழுவிக்கொள்ள, முகம் பொலிவு பெறும்.

வடிகஞ்சி ஃபேஸ் மாஸ்க்

ஈயப்பாத்திரம், மண் பானை போன்றவற்றில் சாதம் வடிக்கும்போது, கிடைக்கும் வடிகஞ்சியானது சருமத்தையும், தலை முடியையும் மிருதுவாக்குகிறது. மேலும், முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் போன்ற பல சருமப் பிரச்னைகளுக்கு வடிகஞ்சி மூலம் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் சிறந்த நிவாரணம் தரும்.

தேவையானவை:
கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒருதேக்கரண்டி
கடலை மாவு -இரண்டு தேக்கரண்டி

செய்முறை: ஒரு கிண்ணத்தில், மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு இரண்டையும் எடுத்து கட்டி இல்லாமல், கலந்து கொள்ள வேண்டும். பின்னர், தேவையான அளவு வடிகஞ்சி சேர்த்து நன்றாகக் குழைத்து கொண்டு, ஃபேஸ் மாஸ்காக வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம். ஓரிரு மாதங்கள் இவ்வாறு செய்து வர, தோல் மிருதுத்தன்மையுடனும், முகம் பளபளப்பு பெறுவதை உணரலாம்.

தேங்காய்ப் பால் ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை:
ஓட்ஸ் – 1 கப்
கெட்டியான தேங்காய்ப் பால் – 1 கிண்ணம்

செய்முறை: சொர சொரப்பாக அரைத்த ஓட்ஸுடன் தேங்காய்ப்பால் கலந்து கொள்ளவும். மேற்கூறிய கலவையை முகத்தில் பூசி, சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
மேற்கூறிய தேங்காய்ப் பால் ஃபேஸ் மாஸ்க் எரிகின்ற சருமத்திற்குக் குளிர்ச்சி தரும்.

பாதாம் பருப்பு ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை:
பாதாம் பருப்பு -3
ஓட்ஸ் பவுடர் -1 தேக் கரண்டி
முட்டை வெள்ளைக் கரு -அரை தேக்கரண்டி
தேன் -நான்கு துளிகள்

செய்முறை: பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கி அரைத்து அதனுடன் ஓட்ஸ் பவுடர், முட்டை வெள்ளைக் கரு, தேன் அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து கலவையாக்கிக் கொள்ளவும். சருமம் வறண்டதாக உணர்ந்தால், சிறிதளவு பாலாடை சேர்த்து நன்றாகக் கலந்த பின் மேற்கூறிய கிரீமை முகம் மற்றும் கழுத்தில் பூசிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு தடவை பூசிக்கொள்ளவும். அதன் பின்னர், சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிக்கொள்ளவும். மேற்கூறிய பாதாம் பருப்பு ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி வர, சருமம் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இன்றி அழகாகவும் தோற்றமளிக்கும்.

பால் பவுடர் ஃபேஸ் பேக்

தேவையானவை:
பால் பவுடர் – 1 மேஜைக் கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை: ஒரு கிண்ணத்தில் பால் பவுடர் 2 மேஜைக் கரண்டியும், தேன் 2 மேஜைக் கரண்டியும் எடுத்துக்கொண்டு ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாகத் தடவி , 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். சருமத்திற்கு ஈரத்தன்மை தரும் மாய்சுரைசராகவும் இது பயன்படுகிறது. அதுபோன்று, பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறையும் பசைப் பதமாக கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து மேற்கூறிய பசை காய்ந்த பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாள்கள் செய்து வர முகம் பொலிவு பெறும்.

தொகுப்பு: ரிஷி

The post முகப்பொலிவை கூட்டும் இயற்கை ஃபேஸ் பேக்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Dr. Face ,
× RELATED கோடையை சமாளிக்க டிப்ஸ்…